அதிபர் ஸி: சீனாவை யாரும் அதிகாரம் செய்ய முடியாது

அதிபர் ஸி: சீனாவை யாரும் அதிகாரம் செய்ய முடியாது

2 mins read

பெய்ஜிங்: சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் சீர்திருத்தங்கள் நடை முறைப்படுத்தப்பட்டு 40 ஆண்டு நிறைவு விழாவை நேற்று கொண்டாடியது. இதன் தொடர்பில் அதிபர் ஸி ஜின்பிங் நாடு தொடர்பான பொருளாதார மேம்பாட்டுப் பாதை தொடர்பில் பேசியபோது யாராலும் சீனாவை அதிகாரம் செய்ய முடியாது என்று கூறி எச்சரிக்கை விடுத்தார். அதிபர் ஸி பொருளாதார சீர் திருத்தங்களின் அடிப்படையில் தொடர்ந்து செல்வதாக உறுதி அளித்ததுடன் ஒரு கட்சி மட்டுமே ஆளும் அமைப்பிலிருந்து பெய்ஜிங் மாறாது என்றும் மற்ற நாடுகளிடமிருந்து உத்தரவுகளை ஏற்காது என்றும் அவர் தம் உரையில் குறிப்பிட்டார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி பொருளாதார தலைமைத்துவத்தை யும் கட்டுப்பாட்டையும் ஏற்கும் என்றும் உலகளாவிய விவகாரங் களில் சீனாவின் பங்கு முக் கியமானது என்றும் சொன்னார். சீர்திருத்தம், மேம்பாடு, நிலைத்தன்மை, உள்நாட்டு வெளி உறவு விவகாரங்கள், தேசிய தற்காப்பு, கட்சி, மாநிலம், ராணுவம் போன்ற பல துறைகளில் கட்சியின் தலைமைத்துவம் செயல்படுத்தப்படும். உலக அமைதி, உலகளாவிய மேம்பாடு, அனைத்துலக உறவு களுக்குத் தற்காப்பு என சீனா உலக அரங்கில் அங்கீகாரம் பெற்ற நாடாக விளங்குகிறது. இதற்கிடையே சீன நாட்டு மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அதிகாரம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை என்று அதிபர் விளக்கினார். அத்துடன் நாட்டின் ஊழலுக்கு எதிரான இயக்கமும் பெரும் வெற்றி கண்டுள்ளதாக அவர் சுட்டினார்.

சீனா எந்த நாட்டிற்கும் மிரட்டலாக இருக்காது என்றும் தன்னை எந்த நாடும் அதிகாரம் செய்ய முடியாது என்றும் அமெரிக்காவை நேரடியாகச் சாடாமல் குறிப்பிட்டார் அதிபர் ஸி.