ஜார்ஜ் டவுன்: 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட சுனாமியால் 200,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்தோனீசியா, மலேசியா, தாய்லாந்து, இலங்கை, இந்தியா முதலிய நாடுகள் பாதிக்கப் பட்டிருந்தன. சுனாமியின் பிடியில் மலேசியாவின் பினாங்குத் தீவும் சிக்கியது. ஆழிப் பேரலைகளால் பினாங்கின் கடலோரப் பகுதிகள் விழுங்கப்பட்ட காட்சியைத் தம்மால் என்றுமே மறக்க முடியாது என்று மலேசியாவின் தி ஸ்டார் நாளிதழிடம் தெரிவித்தார் திரு ஏ. சுப்பையா. பினாங்கின் பிரசித்தி பெற்ற பத்து ஃபெரிங்கி கடற்கரையில் மயாமி கடற்கரைப் பகுதியில் இருந்த அவரது உணவகத்துக்குள் அலைகள் புகுந்தன. அப்போது அவரது மகளான துளசி பிறந்து 22 நாட்கள் மட்டுமே ஆகியிருந்தன. மெத்தையில் படுத்திருந்த குழந்தையைப் பேரலை நடுகடலுக்கு இழுத்துச் சென்றது.
அதைத் தடுக்க முடியாமல் திரு சுப்பையாவும் அவரது குடும்பத்தினரும் துடிதுடித்துப் போனார்கள். ஆனால் அப்போதுதான் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட அரை மணி நேரம் கழித்து, பெரிய அலை ஒன்று மீண்டும் அந்தக் கடற்கரை மீது மோதியது. கூடவே குழந்தையும் கரை திரும்பியது. துளசி உயிர் பிழைத்ததற்கு இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சுனாமி தாக்கிய தினத்தையொட்டி கடந்த புதன் கிழமையன்று பத்து ஃபெரிங்கி கடற்கரையில் துளசியும் அவரது தந்தையும் சிறப்பு வழிபாடு செய்தனர். தமது தாயார், தமக்கையுடன் சேர்ந்து துளசி கடலில் மலர்களைத் தூவினார். அண்மையில் இந்தோ னீசியாவை சுனாமி தாக்கியது கசப்பான நிகழ்வுகளை ஞாபகப் படுத்துவதாக 70 வயது திரு சுப்பையா கூறினார். 2018-12-29 06:10:00 +0800

