கெய்ரோ: எகிப்தில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து கெய்ரோ அருகே கிசா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியதில் அந்த பேருந்தில் சென்றவர்களில் நால்வர் உயிரிழந்தனர். அந்த நால்வரில் மூவர் வியட்னாமைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் என்றும் மற்றொருவர் எகிப்து நாட்டவர் என்றும் அதிகாரிகள் கூறினர். குண்டு வெடிப்பு தாக்குதலில் 11 பேர் காயம் அடைந்தனர். பேருந்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.
இந்நிலையில் எகிப்திய போலிசார் பல இடங்களில் நேற்று மேற்கொண்ட அதிரடி சோதனைகளின்போது போராளிகள் என்று சந்தேகிக்கப்பட்ட 40 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக உள்துறை அமைச்சு அதிகாரிகள் கூறினர். அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்கள், சுற்றுலா இடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றைக் குறிவைத்து தாக்க பயங்கரவாதக் குழுவினர் திட்டமிட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது என்று அமைச்சின் அறிக்கை தெரிவித்தது. புத்தாண்டு நெருங்கும் வேளையில் எகிப்தில் ஏற்கெனவே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

