அன்வார்: கட்சி விவகாரங்களை ஊடகத்திற்கு கொண்டு செல்லக்கூடாது

அன்வார்: கட்சி விவகாரங்களை ஊடகத்திற்கு கொண்டு செல்லக்கூடாது

1 mins read

கோலாலம்பூர்: கெஅடிலான் கட்சி தொடர்பான விவகாரங்களை கட்சிக்குள்ளேயே பேசித் தீர்வு காண வேண்டுமே தவிர ஊடகங்களுக்கு அறிக்கை விடக்கூடாது என்று அக்கட்சியின் தலைவர் அன்வார் இப்ராஹிம், கட்சித் துணைத் தலைவர் முகம்மது அஸ்மின் அலியை கேட்டுக்கொண்டுள்ளார். இது அஸ்மின் அலியின் தனிப்பட்ட கருத்து என்றாலும் கட்சி விவகாரங்களை பொதுவில் பேசுவது சரியல்ல என்று அன்வார் கூறினார். கட்சியின் மத்திய செயலவை தலைமைத்துவப் பொறுப்புகளுக்கான நியமனங்கள் தொடர்பில் அஸ்மின் அலி ஊடகங்களில் அறிக்கை வெளியிட்டிருப்பதைத் தொடர்ந்து அன்வார் இவ்வாறு கூறினார்.

"அஸ்மினுக்கு சில பேர் கட்சியில் இருக்கக்கூடாது. ஆனால் எனக்கு எல்லோரும் வேண்டும்," என்று அன்வார் கூறினார். கெஅடிலான் கட்சி துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய ரஃபிசி ரம்லி, கட்சியின் உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக அன்வார் அறிவித்ததைத் தொடர்ந்து அந்த நியமனங்களை அன்வார் மீண்டும் மதிப்பீடு செய்ய வேண்டும் என்று அஸ்மின் அலி வலியுறுத்தியிருந்தார். அந்த நியமனங்கள் கட்சி உறுப்பினர்களின் நியாயமான பிரதிநிதித்துவ கொள்கையைப் பிரதிபலிக்கவில்லை என்றும் இது கட்சியை முன்னோக்கி கொண்டுசெல்ல உதவாது என்றும் அஸ்மின் அலி கூறியுள்ளார்.