போதிய உணவு: தொழில்நுட்பம் அதிகம் கைகொடுக்கும்

போதிய உணவு: தொழில்நுட்பம் அதிகம் கைகொடுக்கும்

3 mins read

நிலப்பற்றாக்குறை உள்ள ஒரு நாடு சிங்கப்பூர். தன் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப்பொருட்களை முற்றிலும் உற்பத்தி செய்யும் அளவுக்கு நில வளம் இல்லாத நாடான சிங்கப்பூர், இப்போது முட்டை, மீன், காய்கறிகள் போன்ற பலவற்றையும் தொழில் நுட்பங்களின் உதவியோடு உள்ளூரிலேயே உற்பத்தி செய்து வந்தாலும் பல நாடு களிலிருந்து வரும் இறக்குமதிகளையும் அது பெரிதும் சார்ந்து இருக்கிறது. முட்டை, மீன், காய்கறிகள், கடல் உணவு போன்றவற்றை அதிகமாக சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யும் நாடு மலேசியா. அந்த நாடு அண்மையில் பல அறிவிப்பு களை விடுத்தது. ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வரையிலும் அடுத்த ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 30ஆம் தேதி வரையிலும் சிங்கப்பூருக்கான கடல் உணவு ஏற்றுமதி களைக் கட்டுப்படுத்தப்போவதாக மலேசியா அறிவித்தது.

உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் சிங்கப்பூருக்கான முட்டை ஏற்று மதியைக் குறைக்க அல்லது நிறுத்திவிடுவது பற்றி, தான் பரிசீலித்து வருவதாகவும் அந்த நாடு தெரிவித்தது. சிங்கப்பூர் பயன்படுத்தும் முட்டைகளில் சுமார் 73 விழுக்காடு மலேசியாவிலிருந்து வருகின்றன. கால்வாசியை சிங்கப்பூரே உற்பத்தி செய்கிறது. தாய்லாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளிலிருந் தும் ஓரளவுக்கு முட்டை இறக்குமதியாகிறது. குறிப்பாக கிறிஸ்மஸ், புத்தாண்டு, சீனப் புத்தாண்டு போன்ற விழாக்காலங்கள் சேர்ந்து வரும்போது சிங்கப்பூரில் அன்றாட உணவுப் பொருட்களுக்கான தேவை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என்பது இயல்பு.

விழாக் காலத்தில் சிங்கப்பூரில் இத்தகைய பொருட்களுக்கு எப்படி கிராக்கிகூடுகிறதோ அதேபோன்ற நிலை பக்கத்து நாடுகளிலும் நிலவக்கூடும் என்பதும் எந்த ஒரு நாடும் தன் தேவையை நிறைவேற்றிய பிறகே தன் பொருட்களை ஏற்றுமதி செய்யும் என்பதும் வழக்கம்தான். இதைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் மலேசியா விடுத்து இருக்கும் அறிவிப்புகள் வியப்பானவை அல்ல. இத்தகைய விழாக் காலங்களில் இறக்கு மதிகள் குறைந்துவிட்டால் அதை ஈடுசெய்து தன்னுடைய மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் இருப்பதை உறுதிப் படுத்துவது சிங்கப்பூருக்கு உள்ள மிக முக்கிய பொறுப்பாகும்.

மலேசியாவின் நடவடிக்கைகள் காரண மாக சிங்கப்பூரில் மொத்தமாகக் கடல் உணவு வரத்து பெரிதும் பாதித்துவிடாது என்றும் முட்டையை வேறு இடங்களிலிருந்து தரு விக்கத் தன்னிடம் திட்டம் இருக்கிறது என் றும் சிங்கப்பூர் உறுதி தெரிவித்து உள்ளது. விழாக் காலத்தில் அதிகரிக்கும் தேவையை ஈடுசெய்யக்கூடிய நடவடிக்கைகளை அப் போதைக்கு அப்போது எடுப்பதோடு சிங்கப்பூர், உணவைப் பொறுத்தவரையில் சுயசார்பை எட்ட தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வரவேண்டும் என்பதே பொருத்தமானது.

நில வளம் இல்லாத சிங்கப்பூர், வேளாண் துறையைப் பொருத்தவரையில் சுயசார்பை எட்டுவது என்பது இயலாத ஒன்றாக இருக்கக்கூடும். ஆனால், நகர பயிர் தொழில் முறைகளைத் தீவிரமாகக் கைக்கொண்டு அதன் மூலம் இறக்குமதிகளைக் குறைத்துக் கொள்ள தேவையும் அதற்கான வழிகளும் சிங்கப்பூருக்கு இருக்கின்றன. இங்கு வரம்புக்கு உட்பட்ட நிலத்தில் கூடினபட்ச உற்பத்தியைச் சாதிக்க வேண்டு மானால் வேளாண் தொழில்நுட்பங்களுக்கு மாறிக்கொள்ள வேண்டியது தேவையானது, கட்டாயமானது என்கிறது வேளாண்-உணவு, கால்நடை மருத்துவ ஆணையம். இதைக் கருத்தில்கொண்டே சிங்கப்பூரில் வேளாண் தொழில்நுட்பப் பூங்காக்களில் முதலீடுகள் செய்யப்பட்டு உள்ளன. முட்டை, பால், காய்கறிகள், பழங்கள் எல்லாம் அங்கு உற்பத்தி ஆகின்றன. உள்ளூர் நிறுவனங்கள் கீரை வகைகளை யும் அவரை போன்றவற்றையும் பயிர் செய் கின்றன. 80 விழுக்காடு கீரை வகைகள் இங்கு பயிராகின்றன.

வேளாண் துறையில் தொழில்நுட்பத்தை ஆற்றல்மிக்க முறையில், விவேகமாகப் பயன் படுத்திக்கொள்ளவேண்டிய அவசியத்தை எதிர்நோக்கும் சிங்கப்பூர், அதேவேளையில் தனக்குத் தேவையான உணவுப் பொருட் களுக்கு ஓரிரு நாடுகளை மட்டும் சார்ந் திராமல் இதர பல மாற்றுச் சந்தைகளிலும் குறிவைக்கவேண்டும். இதற்குச் செலவு அதிகமாகலாம் எனில் அதற்கு மக்களும் ஆயத்தமாகத்தான் வேண்டும்.