பிரசல்ஸ்: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனை வெளியேற விடாமல் வைத்திருக்க ஒன்றியத்திற்குத் திட்டம் இல்லை என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜான் குலொட் யங்கர் கூறியுள்ளார். அத்துடன் 'பிரக்சிட்' திட்டத்திற்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்ததும் ஒன்றியம் எதிர்கால உறவுகள் குறித்துப் பேச்சுவார்த்தை களைத் தொடங்க விரும்புவதாகவும் அவர் சொன்னார்.
ஜெர்மானிய பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியின்போது இதைத் தெரிவித்த யங்கர், ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் அடுத்தாண்டு மே மாதம் நடக்க இருக்கையில், அதற்கு முன்பே இதனை முடிவு செய்வது முக்கியம் என்று குறிப்பிட்டார். பிரிட்டிஷ் நாடாளுமன்றம் 'பிரக்சிட்' வாக்கெடுப்பில் என்ன முடிவு எடுத்தாலும் அதை ஒன்றியம் மதிக்கும் என்றும் பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே உள்ள எதிர்கால உறவுகள் எவ்வாறு இருக்கும் என்ற தெளிவு தேவை என்றும் அவர் சுட்டினார்.

