டிரம்ப்: சிரியாவிலிருந்து அமெரிக்க ராணுவம் படிப்படியாக வெளியேற்றப்படும்

டிரம்ப்: சிரியாவிலிருந்து அமெரிக்க ராணுவம் படிப்படியாக வெளியேற்றப்படும்

1 mins read

வா‌ஷிங்டன்: சிரியாவிலிருந்து அமெரிக்க ராணுவப் படைகளை உடனே வெளியேற்றவேண்டும் என முன்னர் கூறியிருந்த அந் நாட்டின் அதிபர் டோனல்ட் டிரம்ப், தமது முடிவை மறுபரிசீலனை செய்யலாம் என்று அண்மைய தகவல்கள் கோடிகாட்டுகின்றன. ராணுவத்தை வெளியேற்றுவது குறித்துத் திரு டிரம்ப் இப்போது அதிக எச்சரிக்கையுடன் இருப் பதாக நேற்று வெளிவந்த அவரது டுவிட்டர் பதிவு காட்டுவதாக கவனிப்பாளர்கள் கருதுகின்றனர். சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை வீழ்த்துவதில் திரு டிரம்ப் தம்மிடம் கடப்பாடு தெரி வித்ததாகக் குடியரசுக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான செனட்டர் லின்ட்சே கிரஹம் மூன்று நாட்களுக்கு முன்னர் தெரிவித்ததை அடுத்து திரு டிரம்ப்பின் இப்பதிவு வெளிவந்தது.

"சிரியாவில் எஞ்சியிருக்கும் ஐஎஸ் அமைப்பினருக்கு எதிராக போராடிவரும் அதே வேளையில் அமெரிக்க துருப்பினர் மெல்ல மெல்ல சொந்த நாட்டுக்கு வர வழைக்கப்படுவர்," என்று திரு டிரம்ப் தமது பதிவில் எழுதியுள்ளார். ஐஎஸ் அமைப்பு கிட்டத்தட்ட துடைத்தொழிக்கப் பட்டுள்ளதாக திரு டிரம்ப் தொடர்ந்து டுவிட்டரில் கூறி வருகிறார். ஆயினும், அவரது அணுகுமுறையைக் குறைகூறி வரும் எதிர்க்கட்சியினர், ஊடக நிறுவனங்கள் ஆகியவற்றின்மீது திரு டிரம்ப் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.