மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நூற்றுக்கணக் கான வலதுசாரிகளும் இனவாத எதிர்ப்பு அமைப்பினரும் மோதிக் கொண்டனர். இந்தச் சம்பவம் செயிண்ட் கில்டா கடற்கரையில் நேற்று நிகழ்ந்தது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் பார்த்து கத்தியதாகக் கூறப்படுகிறது. கைகலப்பு மூண்டதை அடுத்து, மெல்பர்ன் போலிசார் அவர்களைக் கலைக்க மூன்று மணி நேரம் படாதபாடு பட்டதாக ஆஸ்திரேலிய ஊடகம் தகவல் தெரிவித்தது. வலதுசாரிகள் சாலையில் இருந்த கார் ஒன்றைத் தாக்கிய தாக அறியப்படுகிறது. வலதுசாரிகளில் பலர் 'நாஸி சல்யூட்' செய்ததாகவும் தகாத சைகைகளைக் காட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டது. கைகலப்பில் ஈடுபட்ட குறைந் தது மூன்று பேரை போலிசார் கைது செய்தனர்.
பிணை நிபந்தனைகளை மீறிய குற்றத்துக்காக ஒருவர் கைது செய்யப்பட்டதாக விக்டோரியா மாநில போலிஸ் படை கண்காணிப் பாளர் டோனி சில்வா தெரிவித் தார். மற்றொருவர் போதைப்பொருள் குற்றத்தின் பேரில் கைது செய்யப் பட்டதாக அவர் தெரிவித்தார். ஆபத்து விளைவிக்கக்கூடிய பொருள் ஒன்றை வைத்திருந்த குற்றத்துக்காக மற்றொருவர் கைது செய்யப்பட்டார். மோதல் ஏற்பட்டபோது நிலை மையைக் கட்டுக்குள் வைத்திருந்த தாகவும் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் ஆஸ்தி ரேலிய போலிஸ் கூறியது.

