யங்கூன்: மியன்மாரில் போலிஸ் சாவடிகள் மீது அரக்கான் ராணுவம் நடத்திய தாக்குதல் களில் போலிஸ்காரர்கள் 13 பேர் கொல்லப்பட்டதாகவும் மேலும் 9 பேர் காயம் அடைந்ததாகவும் அதிகாரத்துவ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அரசாங்கப் படைகளுக்கும் ராக்கைன் போராளிகளுக்கும் இடையே சண்டை தீவிரம் அடைந்துள்ள நிலையில் போலிஸ் சாவடிகள் தாக்கப்பட்டுள்ளன. ராக்கைன் மாநிலத்தில் உள்ள நான்கு போலிஸ் சாவடிகள் மீது அரக்கான் ராணுவத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான போராளிகள் வெள்ளிக்கிழமை தாக்குதல்கள் நடத்தியதாக மியன்மார் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறினார்.
அரசாங்கப் படைகளுக்கும் அரக்கான் ராணுவப் போராளி களுக்கும் இடையில் சண்டை தீவிரம் அடைந்துள்ளதால் கடந்த மாதத் தொடக்கத்திலிருந்தே ராக்கைன் மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 14 வீரர்களை அரக்கான் ராணுவம் சிறைப்பிடித்து சென்றதாகக் கூறப் பட்டது. அவர்களில் 12 பேர் பின்னர் விடுவிக்கப்பட்டனர். ராக்கைன் மாநிலத்தில் வசிக்கும் சிறுபான்மை பெளத்த சமயத்தினருக்கு அதிக தன்னாட்சி கிடைக்க வேண்டும் என்று அரக்கான் ராணுவம் வலியுறுத்தி வருகிறது. ராக்கைன் மாநிலத்தில் 2017ஆம் ஆண்டு போராளிகளை ஒடுக்க ராணுவம் கடும் தாக்குதலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அங்கு பெரும் கலவரம் மூண்டது. சண்டைக்குப் பயந்து ஆயிரக்கணக்கான ரோஹிங்யா முஸ்லிம்கள் அந்த மாநிலத்தி லிருந்து வெளியேறி பங்ளாதேஷில் தஞ்சம் அடைந்தனர். ரோஹிங்யா மக்களின் பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.

