வான் அசிசா: மாமன்னர் பதவி துறந்தது வருத்தம் அளிக்கிறது

வான் அசிசா: மாமன்னர் பதவி துறந்தது வருத்தம் அளிக்கிறது

1 mins read
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசியாவின் 15வது மாமன்னராகப் பதவி வகித்த சுல்தான் ஐந்தாம் முகம்மது பதவி துறப்பதாக அறிவித்த பின்னர் அவர் பதவி விலகியது தமக்கு வருத்தமாக உள்ளது என்று மலேசிய துணைப் பிரதமர் வான் அசிசா கூறியுள்ளார். "சிறையில் இருந்த என் கணவர் அன்வார் இப்ராகிமுக்கு சென்ற ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து பொது மன்னிப்பு வழங்கியவர் சுல்தான் ஐந்தாம் முகம்மதுதான்," என்று வான் அசிசா கூறினார். இருப்பினும் சுல்தான் ஐந்தாம் முகம்மது எடுத்த முடிவுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று வான் அசிசா கூறியதாக மலாய் மெயில் செய்தி வெளி யிட்டுள்ளது.

சிலாங்கூரில் அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு மாநாட்டில் கலந்து கொண்ட வான் அசிசா பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். "மாமன்னர் எடுத்த முடிவை நாங்கள் மதிக்கிறோம். ஆனாலும் எனக்கு வருத்தமாகவும் உள்ளது. மலேசியாவில் பெரிய மாற்றம் நிகழ்ந்தபோது மாமன்னராக இருந்தவர் சுல்தான் ஐந்தாம் முகம்மது. புதிய பிரதமர் பதவி ஏற்றபோது அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தவரும் சுல்தான் முகம்மதுதான். மலேசியா வில் வரலாற்று முக்கியத்துவ நிகழ்வான அரசாங்க மாற்றத்தை கண்கூடாகப் பார்த்தவர் அவர்," என்று வான் அசிசா கூறினார்.