கூகல் நிறுவனத்தை இயக்கும் 'ஆல்பபெட் இங்க்' நிறுவனத்தின் நிர்வாக அவை, பாலியல் முறைகேட்டுச் சம்பவங்களை மூடி மறைத்ததாக அந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் குற்றஞ்சாட்டுகின்றன. இது தொடர்பில் அந்தப் பங்குதாரர்கள், இரண்டு நிர்வாகிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
ஊழியர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையை இந்நிறுவனத்தின் இயக்குநர்கள் ஆற்ற தவறியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. எதிர்காலத்தில் இத்தகைய பிரச்சினைகள் நடந்திராமல் உறுதி செய்ய கூகல் தனது நிர்வாக முறையை மாற்ற இந்த வழக்குகள் முற்படுகின்றன.
2014ஆம் ஆண்டு வரை கூகலின் ஆண்ட்ராய்ட் கைத்தொலைபேசி செயலாக்கப் பிரிவின் இயக்குநராகப் பணியாற்றிய ஆண்டி ரூபினுக்கும் 2016ஆம் ஆண்டு வரை கூகலின் தேடுதள பிரவின் தலைவர் அமிட் சிங்ஹலுக்கும் அதிக முறிப்புத் தொகை கட்டப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கவனத்தைப் பெற்றன.
இவ்விரு தலைவர்களை கூகல் விசாரித்ததில் இருவருக்கும் எதிரான பாலியல் தொந்தரவு புகார்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவை என்று அந்நிறுவனம் முடிவு செய்தது. பாலியல் முறைகேட்டுச் சம்பவங்களை கூகல் இதற்கு முன்பு கையாண்ட விதத்திற்காக மன்னிப்பு கேட்பதாகவும் இத்தகைய விவகாரங்களைக் கையாளும் முறைகள் மேம்படுத்தப்படும் என்று கூகலின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

