அவசர நிலையை அறிவிக்கத் தயாராகும் டிரம்ப் நிர்வாகம்

அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையிலான எல்லைச் சுவரைக் கட்டுவதற்காக அமெரிக்க அரசாங்கம் அவசர நிலையை அறிவிக்க தயாராகி வருகிறது. ராணுவம் உள்ளிட்ட பல்வேறு அரசாங்கத் துறைகளிலிருந்து பயன்படுத்தப்படாத நிதி இந்தச் சுவரை அமைப்பதற்கு ஒதுக்கப்படலாம் என்று அமெரிக்காவின் ‘வா‌ஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.

இத்தகைய பிரகடனத்தை எதிர்த்து அந்நாட்டின் எதிர்க்கட்சியினர் சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்கலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருதுகின்றனர்.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த திரு டிரம்ப்புக்கும் ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கும் இடையிலான மோதல் போக்கு அதிகரித்து வருவதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர். அவசர நிலை அறிவிக்கப்பட்டால், நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமலேயே திரு டிரம்ப், இந்தச் சுவரைக் கட்டும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.