அன்வார்: வெளிநாட்டினருக்கு எதிரான பகைமைப்போக்கு நிராகரிக்கப்படவேண்டும்

வெளிநாட்டினருக்கு எதிரான பகைமைப்போக்கும் பூசல்களைக் கிளப்பும் பேச்சுகளும் அனைத்துலக அமைதியையும் பாதுகாப்பையும் அச்சுறுத்துவதை மலேசியாவின் பக்கத்தான் ஹரப்பான் கட்சியின் தலைவரும் முன்னாள் துணைப்பிரதமருமான திரு அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.

“தீவிர தேசியவாதத்தின் எழுச்சி உலகெங்கும் ஏற்பட்டுள்ளது. இது பாதுகாப்புக்கும் அமைதிக்கும் மிரட்டலாகவும் உள்ளது,” என்று திரு அன்வார், புதுடில்லியில் நடைபெற்ற நிலம் சார்ந்த அரசியல் மாநாட்டில் நேற்று மாலை உரையாற்றியபோது கூறினார். 

அமெரிக்கா வழிநடத்தும் பல்வேறு போர்களால் அழிவு பெருமளவில் ஏற்பட்டிருப்பதாக அன்வார் சாடினார். ஈராக், லிப்யா, ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள போர்களால் ஆசியாவிலும் உலகிலும் பதற்றம் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். 
பக்கத்தான் ஹரப்பானின் கீழ் மலேசியா புதிய யுகத்திற்கு அடியெடுத்துள்ளதாகவும் அமைதியான முறையில் அதிகாரம் மாறியது வியக்கத்தக்கது என்றும் திரு அன்வார் அப்போது தெரிவித்தார். இன நல்லிணக்கத்தின் மீது பக்கத்தான் ஹரப்பான் கொண்டுள்ள உறுதியான கொள்கை இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்றும் என்றும் அவர் கூறினார்.