சேவைகளின் முடக்கத்தால் ‘ஃபையர்ஃபிலை’க்குப் பேரிழப்பு

கோலாலம்பூர்: மலேசியாவின் மலிவுச் சேவைக் கட்டண விமான நிறுவனமான  சிங்கப்பூருக்குச் செல்லும் ‘ஃபையர்ஃபிலை’, விமான சேவைகள் கடந்த மாதம் முடக்கப்பட்டத்தைத் தொடர்ந்து அந்நிறுவனம் 20 மில்லியன் ரிங்கிட் வரை இழக்கலாம் என்று தெரிவித்தது. ‘ஃபையர்ஃபிலை’யை நிர்வகிக்கும் மலேசிய ஏர்லைன்ஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இஸாம் இஸ்மைல் இதனைச் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

விமானச் சேவைகளின் முடக்கத்தால் ஃபையர்ஃபிலை நிறுவனத்திற்கு இதுவரை சுமார் 15 மில்லியன் ரிங்கிட் பேரிழப்பு நேர்ந்ததாக திரு இஸாம் கூறியதாக ‘த மலேசியா இன்சைட்’ செய்தித்தளம் தெரிவித்தது. சிங்கப்பூரிலுள்ள சிலேத்தார் விமான நிலையத்தில் செயல்படுவதற்கான அனுமதியைத் தர மலேசியாவின் சிவில் விமானத்துறை அதிகாரிகள் கடந்த நவம்பர் மறுத்தனர். புதுப்பிக்கப்பட்டிருந்த சிலேத்தார் விமான நிலையம் நவம்பர் 19ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது.

சிலேத்தார் விமான நிலையத்திற்கான சிங்கப்பூரின் ‘ஐஎல்எஸ்’ முறைக்கு மலேசியா எதிர்ப்பு தெரிவித்திருந்தது. பாசிர் குடாங் வட்டாரத்தில் உயரமான கட்டடங்கள் கட்டப்படுவதற்கு மலேசியா டிசம்பர் 25ஆம் தேதி தடை விதித்தது. இந்தத் தடை விமானங்களின் வழக்கமான செயல்பாடுகளைப் பாதிப்பதாக சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது. ஆயினும், பாசிர் குடாங் மீதான மலேசியாவின் கட்டுப்பாடும் சிங்கப்பூர் செயல்படுத்தும் ‘ஐஎல்எஸ்’ முறையும் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.