ஒட்டாவா: குடும்பத்திலிருந்து தப்பியோடி வந்த சவூதிப் பெண்ணுக்கு கனடா அடைக்கலம் கொடுக்க முன்வந்த நிலையில் அந்தப் பெண் நேற்று கனடாவுக்கு வந்து சேர்ந்ததாக தகவல்கள் கூறின. சவூதி நாட்டைச் சேர்ந்த ரஹாஃப் முகம்மது அல் குனன் என்ற 18 வயதுப் பெண் தன் குடும்பத்துடன் குவைத்திற்கு சுற்றுலா பயணம் சென்றிருந்தபோது அங்கிருந்து தப்பித்து விமானம் மூலம் பேங்காக் வந்து சேர்ந்தார்.
பேங்காக் வழியாக ஆஸ்திரேலியா செல்ல அப்பெண் திட்டமிட்டிருந்த நிலையில் அவரிடம் உரிய பயண ஆவணங்கள் இல்லாததால் பேங்காக் விமான நிலையத்தில் பிடிபட்டார். தான் இஸ்லாம் மதத்தை துறந்துவிட்டதாகவும் சவூதி அரேபியாவுக்கு தன்னை திருப்பி அனுப்பினால் தன் உயிருக்கு ஆபத்து என்றும் அப்பெண் ஐநா அதிகாரிகளிடம் கூறியிருந்தார்.

