சீனாவில் கனடிய ஆடவருக்கு மரண தண்டனை

சீனாவில் கனடிய ஆடவருக்கு மரண தண்டனை

1 mins read
174e15b7-c475-48b2-a21c-30032c2e09cf
-

பெய்ஜிங்/ஓட்டாவா: கனடிய ஆடவர் ஒருவருக்கு சீன நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இதனைக் கண்டித்துள்ள கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சீனா கொடுங்கொன்மையான முறையில் மரண தண்டனையை தனது விருப்பத்திற்குப் பயன்படுத்துவதாகச் சாடினார்.

போதைப் பொருள் கடத்தலுக்காகக் குற்றஞ்சாட்டப்பட்ட ராபர்ட் லாய்ட் ஸ்கெல்லன்பர்க்கின் மேல்முறையீட்டு வழக்கை சீன நீதிமன்றம் மீண்டும் விசாரித்தபோது, முதலில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த 15 ஆண்டு சிறைத்தண்டனைக்குப் பதிலாக மரண தண்டனை விதித்தது.

"சீனா இவ்வாறு சொந்த விருப்பத்திற்கு மரண தண்டனையை விதிப்பது கனடாவுக்கு மட்டுமின்றி, எங்களது அனைத்துலக பங்காளிகளுக்கும் நட்பு நாடுகளுக்கும் மிகவும் அக்கறைக்குரிய விவகாரமாக உள்ளது," என்று பிரதமர் ட்ரூடோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சீனாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவில் ஏற்கெனவே நிலவும் பதற்றம், இந்நிகழ்வால் மேலும் அதிகரித்துள்ளது. சீனாவைச் சேர்ந்த ஹுவாவெய் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்சாவ் கனடாவில் கடந்த டிசம்பர் கைது செய்யப்பட்டதை அடுத்து, சீனா இரண்டு கனடியர்களைக் கைது செய்தது.