கனடிய பிரதமரின் மரண தண்டனை கருத்து; சீனா கண்டனம்

கனடிய பிரதமரின் மரண தண்டனை கருத்து; சீனா கண்டனம்

1 mins read
c79604ef-a5d2-4b8e-9fe0-a266093fb682
-

பெய்ஜிங்: சீனா, தனது சொந்த விருப்பத்தின்பேரில் கனடியர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்க முடிவு செய்ததாக கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதை அந்நாடு கண்டித்திருக்கிறது. போதைப் பொருள் குற்றங்களுக்காக ராபர்ட் லாய்ட் ஸ்கெல்லன்பர்க்கு இந்தத் தண்டனை நேற்று முன்தினம் வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் ட்ரூடோ நேற்று இதனைக் கூறிய சில மணி நேரங்களிலேயே, சீனாவுக்கும் கனடாவுக்கும் முக்கியமான நீண்ட நாள் உறவு இருப்பதாக கனடாவின் வெளியுறவு அமைச்சர் கிரிஸ்தியா ஃப்ரீமென் தெரிவித்தார். இரு நாட்டு உறவில் வெகுவாக அதிகரித்துள்ள பதற்றநிலையைத் தணிக்க எண்ணி அவர் அவ்வாறு கூறியிருக்கலாம் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர். இருந்தபோதும் சீனா இது குறித்து கடுமையான அதிருப்தியில் இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுன்யிங் தெரிவித்தார். "கனடாவைச் சேர்ந்த ஒரு நபரின் இந்தக் கருத்து, சட்ட அமைப்பு பற்றிய அடிப்படையான அறிவு அவருக்கு இல்லை என்று காட்டுகிறது," என்று அவர், பிரதமர் ட்ரூடோவை மறைமுகமாகச் சாடினார்.

கடந்தாண்டு டிசம்பரில் ஹுவாவெய் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்சாவ் அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில் கனடாவில் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் வர்த்தகத் தடைகளை திருவாட்டி மெங் மீறியிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் அவர் கைதானார். இரு நாட்கள் கழித்து, நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும் விதமாக நடந்துகொண்டதன் பேரில் சீனா இரு கனடியர்களைக் கைது செய்தது. இந்நிகழ்வுகளால் ஏற்கெனவே நிலவும் பதற்றநிலை இப்போது கூடியுள்ளது.