ஒட்டாவா: சவூதி அரேபியாவைச் சேர்ந்த ரஹஃப் முகம்மதின் பாதுகாப்பு குறித்த அக்கறைகளின் காரணமாக கனடிய அரசாங்கம் அவருக்கு மெய்க்காப்பாளரை நியமித்துள்ளது. 18 வயது ரஹஃப் தற்போது கனடாவில் அகதியாகத் தஞ்சம் புகுந்துள்ளார்.
தனது குடும்பத்தினரின் கொலை மிரட்டல்களுக்கு அஞ்சி 18 வயது ரஹஃப், தாய்லாந்து விமான நிலைய ஹோட்டல் அறையில் தன்னை அடைத்துக்கொண்ட சம்பவம் அனைத்துலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆயினும், ரஹஃப்பைத் தாங்கள் சித்ரவதை செய்யவில்லை என அவர்களது குடும்பத்தார் கூறுகின்றனர். ஆயினும், இணையம் வழியாக பல்வேறு மிரட்டல்கள் அந்த இளம்பெண்ணின் மீது விடுக்கப்பட்டதாக 'கோஸ்டி' என்ற அகதி அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி மரியோ கல்லா தெரிவித்தார். "இந்த மிரட்டல் எந்த அளவுக்குக் கடுமையாக உள்ளது என்பது தெரியவில்லை. ஆயினும், நாங்கள் இதனைக் கவனமாகக் கையாள்கிறோம்," என்று அவர் கூறினார்.
கனடாவிலுள்ள மற்ற பெண்களைப் போல் தானும் சராசரியான ஒரு வாழ்க்கையைத் தொடங்க விரும்புவதாக ரஹஃப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். "நான் அதிர்ஷ்டசாலி. என்னைப் போல் தப்ப முயன்ற பெண்கள் கொல்லப்படுகின்றனர்," என்று அவர் சொன்னார்.

