லண்டன்: தமக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திலிருந்து பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே (படம்) நூலிழையில் தப்பித் துள்ளார். வெறும் 19 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தமது பிரதமர் பதவியைத் தக்க வைத்துக்கொண்டார். தெரேசா மே தலைமையிலான அரசாங்கத்தை ஆதரிப்பதாக 325 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். 306 பேர் திருவாட்டி மேயை எதிர்த்து வாக்களித்தனர். தெரேசா மே முன்வைத்த பிரெக்சிட் திட்டத் துக்கு அவரது கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் எதிர்ப்புத் தெரிவித் திருந்தனர். இருப்பினும், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் தெரேசா மேக்கு எதிராக வாக்களித்தால் ஆட்சி கவிழ்ந்து பொதுத் தேர்தல் நடந்து தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வரும் சாத்தியம் இருப்பதை எண்ணி அவர்கள் திருவாட்டி மேக்கு ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேற பிரிட்டன் முடிவெடுத் துள்ளது. அதைë/„ட்டிப் பிரெக்சிட் திட்டம் ஒன்றை தெரேசா மே நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். அவர் முன்வைத்த திட்டத்தை ஏற்க பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறுக்க, சிங்கப்பூர் நேரப்படி நேற்று அதிகாலை நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதிலிருந்து தப்பிய தெரேசா மே, பிரெக்சிட் திட்டம் குறித்துப் பிற கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாட இருப்பதாகக் கூறினார். நம்பிக்கை இல்லாத் தீர்மானம் முடிந்த கையுடன் கலந்துரையாடல் தொடங்கியது.

