பிரதமர் லீக்கு கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு

பிரதமர் லீக்கு கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு

1 mins read
e37a910f-f5e8-4c49-b649-ce03bc69fbf7
கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ -

கனாடவுக்கும் சீனாவுக்கும் இடையே தற்போது நிலவி வரும் மோதல் குறித்து கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சிங்கப்பூரின் பிரதமர் லீ சியன் லூங்கிடம் தொலைபேசி வழியாக விளக்கமளித்தார்.

சட்ட முறைகளை எல்லா நாடுகளும் பின்பற்றுவது முக்கியம் என்று பிரதமர் லீ குறிப்பிட்டதாக பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்தது. வெளிநாட்டவர்கள் தொடர்பான வழக்குகளைக் கையாளும்போது, சட்ட முறைகளைப் பின்பற்றுவது முக்கியம் என்றும் அவர் கூறியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"இந்தப் பிரச்சினை மேலும் மோசமடையாமல் அமைதியாகவும் நட்பார்ந்த முறையிலும் தீர்வதை விரும்புவதாகப் பிரதமர் லீ தெரிவித்தார்," என்றும் பிரதமர் அலுவலகம் கூறியது.

திரு ட்ரூடோ, தொலைபேசி வழி தனது நாட்டுக்கும் சீனாவுக்கும் இடையிலான இந்தச் சர்ச்சையைப் பற்றி பல்வேறு அனைத்துலகத் தலைவர்களிடம் பேசியிருப்பதாக அவரது அலுவலகத்தின் அதிகாரபூர்வ இணையத்தளம் தெரிவித்துள்ளது.

ஹுவாவே நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கனடாவில் கடந்தாண்டு இறுதியில் கைது செய்யப்பட்டதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மோசமடைந்து வருகிறது.