இனவெறி தாக்குதல்: படுகாயமுற்ற மலேசியர் மரணம்

இனவெறி தாக்குதல்: படுகாயமுற்ற மலேசியர் மரணம்

1 mins read

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை அரங்கேற்றப்பட்ட கொடூரமான தாக்குதலில் மலேசிய உணவக உரிமையாளர் ஒருவர் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் திரு இங் டான் கியோங் உயிரிழந்ததை மருத்துவமனை ஊழியர்கள் உறுதி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. "கடுமையான காயங்கள் ஏற்பட்டதன் காரணமாகப் பாதிக்கப்பட்டவர் மாண்டு விட்டதை நியூயார்க் போலிஸ் உறுதி செய்தது," என்று மலேசிய வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறினார். "மாண்டவரின் உறவினரைத் தொடர்பு கொண்டு செய்தியைத் தெரிவித்ததைத் தொடர்ந்து அவரது நல்லுடலை மலேசியா விற்கு கொண்டு செல்ல குடும்பத்தினர் ஏற்பாடுகளைச் செய்வர்," என்றும் அவர் சொன்னார். புரூக்லின் பகுதியில் கடல் உணவு விற்கும் உணவகத்தில் மாலை 5 மணியளவில் ஆடவர் ஒருவர் சுத்தியலைக் கொண்டு 60 வயது திரு இங்கையும் இரு வேறு ஊழியர்களையும் கொடூரமாக தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. அப்போது அந்த உணவகத்தில் வாடிக்கையாளர் கூட்டம் நிரம்பி இருந்ததாகக் கூறப்பட்டது. இந்தத் தாக்குதலில் திரு இங்கிற்குப் பலத்த காயம் ஏற்பட்டது.