ரயில் பாதைஒப்பந்தம்:  ரத்து செய்த மலேசியா

கோலாலம்பூர்: கிழக்கு கடற்கரை ரயில் பாதை தொடர்பாக சீன நிறுவனத்துடன் செய்யப்பட்டிருந்த ஒப்பந்தத்தை மலேசியா ரத்து செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து, புதிய ஒப்பந்தக்காரரை மலேசியா தேடி வருகிறது.
ரயில் பாதையை கட்ட தோராயமாக 81 பில்லியன் ரிங்கிட் செலவாகும் என்று கணிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்தத் தொகையை 40 பில்லியன் ரிங்கிட்டுக்கு மலேசியா குறைத்துள்ளது. மலேசிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையையும் மேற்கு கடற்கரையையும்  இணைக்கும் அந்த 688 கிலோ மீட்டர் தூர ரயில் பாதைக்கான கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கடந்த மே மாதத்தில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக் கட்சிகள் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைத்தன.
அதனைத் தொடர்ந்து, தேசிய முன்னணி அரசாங்கம் செய்திருந்த ஒப்பந்தங்களை அது மறுஆய்வு செய்து வருகிறது.
ரயில் பாதையைக் கட்டுவதற்கான தொகையைக் குறைத்துக்கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த சீன நிறுவனத்திடம் மலேசியா கோரிக்கை விடுத்திருந்ததாகக் கூறப்படுகிறது. மலேசியாவின் கோரிக்கையை அந்த நிறுவனம் ஏற்க மறுத்ததை அடுத்து ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.