அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

பெய்ஜிங்: சீனாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாவையின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்சோவை கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
அங்கு அவருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. பல அனைத்துலக நிறுவனங்களை ஏமாற்ற மெங் சதித் திட்டம் தீட்டியதாக அவர் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளதைக் கனடா சுட்டியது. அமெரிக்கா விடுத்த கோரிக்கையை ஏற்று கடந்த டிசம்பர் மாதம் 1ஆம் தேதியன்று கனடா அதிகாரிகள் மெங்கைக் கைது செய்தனர்.
அவர் தற்போது கனடாவில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மெங்கை நாடு கடத்த அமெரிக்கா முயன்றால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.  “அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கையைப் பொறுத்து எங்களது செயல்பாடு அமையும். அமெரிக்காவும் கனடாவும் அவை செய்துள்ள தவற்றை உணர்ந்து அவற்றைத் திருத்திக்கொள்ள வேண்டும்,” என்று சீன வெளியுறவு அமைச்சு அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.