சீண்டிப்பார்க்கும் ஜப்பான்: தென்கொரியா குற்றச்சாட்டு

சோல்: கடற்பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் தனது போர்க் கப்பலுக்கு மேலே ஜப்பானிய சுற்றுக்காவல் விமானம்  ஒன்று அச்சுறுத்தும் வகையில் பறந்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
ஜப்பானின் இந்நடவடிக்கை நட்பு நாடான தன்னை ஆத்திரமூட்டும் செயல் என்றும் தென்கொரியா குறிப்பிட்டது.
“நட்பு, அண்டை நாட்டின் கப்பலுக்கு மேலாக ஜப்பானிய விமானம் தாழப் பறந்ததில் ஏதேனும் உள்நோக்கம் இருக்கலாம் எனச் சந்தேகப் படுகிறோம்,” என்று தென் கொரியா தெரிவித்துள்ளது.  
இதன்தொடர்பில் ஜப்பான் தூதரகத்தில் உள்ள தற்காப்பு அதிகாரியைத் தொடர்பு கொண்டு புகார் அளித்து இருப்பதாகவும் தென்கொரியத் தற்காப்பு அமைச்சு கூறியது.
அதோடு, ஜப்பானின் இத்தகைய செயல் மீண்டும் தொடர்ந்தால் எங்களது ராணுவ நடத்தை விதிகளின் படி கடுமையான பதிலடி கொடுப்போம் என்றும் அந்த நாடு எச்சரித்துள்ளது.
தென்கொரியாவின் இந்த அறிவிப்பு குறித்து தான் அறிந்துள்ளதாகவும் இரு நாடுகளும் தொடர்பில் இருப்பது மிகவும் அவசியம் என்றும் ஜப்பானின் தலைமை அமைச்சரவைச் செயலாளர் கூறியதாக தென்கொரியாவின் யோன்ஹப் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இதனிடையே, சுவிட்சர்லாந்தின் டாவோசில் இவ்விரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் நேற்று சந்தித்துப் பேசினர்.
 

Loading...
Load next