ஜகார்த்தாவின் முன்னைய ஆளுநர் பசுக்கி பூர்ணாமா விடுதலை

சமய நிந்தனை குற்றத்திற்காக ஈராண்டுக்கு முன்னர் சிறை சென்ற ஜகார்த்தாவின் முன்னைய ஆளுநர் பசுக்கி பூர்ணாமா இன்று விடுதலை செய்யப்பட்டார்.

ஜகார்த்தாவின் தெற்குப் பகுதியிலுள்ள சிறைச்சாலையிலிருந்து பூர்ணாமா வெளியேறுவதற்காகக்  காத்திருந்த அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியுடன் அவருக்கு ஆதரவான வாசகங்களை முழங்கினர்.

பூர்ணாமா இஸ்லாமிய மதத்தை நிந்தித்ததாக அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு மே மாதத்தில் அவருக்கு ஈராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆயினும், நன்னடத்தை காரணமாக பூர்ணாமா இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே விடுதலை செய்யப்பட்டார்.

எண்ணெய் வர்த்தகத்திலும் தொலைக்காட்சி படைப்பிலும் பூர்ணாமா ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உரை நிகழ்த்துவதற்கான அழைப்புகள் பல்வேறு நாடுகளிலிருந்து அவருக்குத் தொடர்ந்து கிடைத்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.