லிம் கிட் சியாங், எம். மனோகரனுக்கு எதிராக முழக்கங்கள்

கேமரன் மலை: மலேசியாவின் ஜனநாயக செயல் கட்சியின் லிம் கிட் சியாங், எம். மனோகரன் ஆகியோருக்கு எதிராக கேமரன் மலையில் உள்ள உணவகத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கேமரன் மலையில் நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் சார்பாக ஜனநாயக செயல் கட்சியின் 
எம். மனோகரன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், லிம் கிட் சியாங்கும் மனோகரனும் ஓர் உணவகத்திற்குச் சென்றிருந்தபோது அவர்களுக்கு எதிராக அங்கிருந்த சிலர் முழக்கமிடுவதைக் காட்டும் காணொளி இணையத்தில் வலம் வருகிறது. அரசியல்வாதிகள் அனைவரும் தங்களை ஏமாற்றிவிட்டதாக ஒருவர் லிம் கிட் சியாங்கையும் மனோகரனையும் நோக்கி கத்துவதைக் காணொளி காட்டுவதாகக் கூறப்படுகிறது.
தங்களுடன் வந்திருந்த சிங்க நடன குழுவுடன் உணவகத்தைவிட்டு லிம் கிட் சியாங்கும் மனோகரனும் வெளியேறிக்கொண்டிருந்தபோது, லிம் சொன்ன சொல்லைக் காப்பாற்றவில்லை என்று ஒருவர் கத்தியதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, சீஃபீல்ட் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நிகழ்ந்த கலவரத்தை அடுத்து, தீயணைப்பு படையைச் சேர்ந்த முகம்மது அடிப் முகம்மது காசிம் மாண்டதற்கு ஜனநாயக செயல் கட்சிதான் காரணம் என்று குறிப்பிடும் பதாகை ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது. இத்தகைய பொய் குற்றச்சாட்டுகள் நிறத்தப்படவில்லை என்றால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்போவதாக எம். மனோகரன் தெரிவித்தார்.