நாடாளுமன்ற ஒப்புதலில்லாமல் செயல்பட டிரம்ப் எண்ணம்?

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், நாடாளுமன்ற ஒப்புதலில்லாமல் அவசரகால அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்க-மெக்சிகோ எல்லைப்பகுதியில் சுவர் எழுப்புவது  குறித்து மீண்டும் யோசிப்பதாக அமெரிக்காவின் ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் தெரிவித்துள்ளது. குடியரசு கட்சியைச் சேர்ந்த டிரம்ப்புக்கும் ஜனநாயகக் கட்சியினரைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள நாடாளுமன்ற நாயகர் நேன்சி பெலோசிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இழுபறியாக உள்ள இந்நிலையில் அதிபர் டிரம்ப் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

எல்லைப்பகுதியில் சுவர் கட்டுவதற்காக அமெரிக்காவின் செலவினத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு ஜனநாயகக் கட்சியினரின் ஆதிக்கத்தில் இருக்கும் நாடாளுமன்றம் மறுத்ததை அடுத்து அமெரிக்க அரசாங்கம் டிசம்பர் 22 முதல் ஜனவரி 25 வரை முடக்கப்பட்டது. இதனால் நூறாயிரக்கணக்கான மத்திய அரசாங்க ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கப்படவில்லை. இந்த முடக்கம், அமெரிக்க வரலாற்றில் ஆக நீளம்.

இந்நிலையில், தேசிய அவசர நிலையை அறிவிப்பதே தமக்கு இருக்கக்கூடிய சிறந்த வழி என்று திரு டிரம்ப், தனது ஆலோசகர்களிடம் கூறியிருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்தது.  இதனை ஜனநாயகக் கட்சியினர் மட்டுமன்றி திரு டிரம்ப்பின் சொந்தக் கட்சியினர் பலரும் நிராகரித்துள்ளனர்.