இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டால் மலேசியாவில் விளையாட்டுப் போட்டி ரத்து

மலேசிய இளையர், விளையாட்டுத் துறை அமைச்சர் சையது சதிக் சையது அப்துல் ரஹ்மான். (படம்: பெர்னாமா)

உடற்குறையுள்ள விளையாட்டாளர்களுக்கான அனைத்துலக ‘பெரலிம்பிக்’ போட்டிகளின் செயற்குழு (ஐபிசி), இவ்வாண்டுக்கான உலக ‘பெரலிம்பிக்’ நீச்சல் போட்டியை நடத்த மலேசியாவைத் தடை செய்திருப்பதாக அறிவித்தது. இஸ்ரேலைச் சேர்ந்த விளையாட்டாளர்கள் போட்டியில் பங்குபெறுவதற்கு மலேசியா தடை அறிவித்ததை அடுத்து ‘ஐபிசி’ இந்த முடிவுக்கு வந்தது.  2020இல் ஜப்பானின் தோக்கியோ நகரில் நடைபெறவிருக்கும் ‘பெரலிம்பிக்’ போட்டிகளில் பங்குபெறுவதற்கான தகுதிச் சுற்றாக உலக ‘பெரலிம்பிக்’ நீச்சல் போட்டி சரவாக்கில் இவ்வாண்டு ஜூலை 29ஆம் தேதிக்கும் ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கும் இடையே நடைபெறவிருந்தது. இதே தேதிகளில் போட்டி வேறோர் இடத்தில் நடத்தப்படும் என்று ‘ஐபிசி’ தெரிவித்தது. 

“அனைத்துலகப் போட்டிகள் எந்தப் பாகுபாடும் இன்றி தகுதிபெறும் விளையாட்டாளர்களை வரவேற்கவேண்டும். விளையாட்டுப் போட்டிகளை ஏற்று நடத்தும் ஒரு நாடு, அரசியல் காரணங்களுக்காகக் குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்குபெறுவதற்குத் தடை விதித்ததால் நாங்கள் வேறு வழியின்றி போட்டியை நடத்தும் பொறுப்பை மற்றொரு நாட்டிடம் ஒப்படைக்கவேண்டியிருந்தது,” என்று ‘ஐபிசி’ தலைவர் ஆன்ட்ரூ பார்சன்ஸ் தெரிவித்தார்.

இதன் தொடர்பில் பேசிய மலேசிய இளையர், விளையாட்டுத் துறை அமைச்சர் சையது சதிக் சையது அப்துல் ரஹ்மான், “பாலஸ்தீனர்களின் தவிப்பு குறித்து மலேசியா கொண்டிருக்கும் அனுதாபத்தின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதிலிருந்து நாங்கள் பின்வாங்கமாட்டோம்”, என்று தெரிவத்தார்.  மலேசியாவின் முடிவைச் சாடியுள்ள இஸ்ரேல், யூதர்கள் மீது மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது கொண்டுள்ள தீரா வெறுப்பே இதற்குக் காரணம் எனத் தெரிவித்தது. யூதர்களுக்கு எதிரான குறைகூறல்களை டாக்டர் மகாதீர் பல காலமாகக் கூறி வருவதால் உலக நாடுகளின் கண்டனங்களுக்கு உள்ளாகிறார். 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கிறைஸ்ட்சர்ச் நகரின் அல் நூர் பள்ளிவாசலின் முன்பு நடைபெற்ற மாபெரும் சிறப்புத் தொழுகையிலும் மௌன அஞ்சலி நிகழ்விலும் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் முக்காடு அணிந்து பங்கேற்றார். படம்: ராய்ட்டர்ஸ்

23 Mar 2019

நாடளாவிய மௌன அஞ்சலி