ஹுவாவெய் நிதி அதிகாரி மீது குற்றம் சாட்டும் அமெரிக்கா

சீனத் தொழில்நுட்ப பெருநிறுவனம் ஹுவாவெய்யின் தலைமை நிதி அதிகாரி மெங் வாங்சவ் மீது அமெரிக்க போலிஸ் வங்கி மோசடி குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளது. போட்டி நிறுவனம் ஒன்றிடமிருந்து தொழில் ரகசியங்களை மெங் திருடியதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. சீன அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்று ஹுவாவெய் அந்நாட்டுக்காக அமெரிக்காவை வேவு பார்ப்பதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். அமெரிக்க நிறுவனங்களின் தொழில்நுட்ப ரகசியங்களைத் திருடி சீனா, நியாயமற்ற முறையில் உலகச் சந்தையில் போட்டியிடுவதாகவும் கருதப்படுகிறது.

சீனாவிலோ, இந்தக் குற்றச்சாட்டு வேறு விதமாகப் பார்க்கப்படுவதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர். தங்களது நாட்டின் தொழில்நுட்ப எழுச்சியை அமெரிக்கா ஒடுக்க முயல்வதாக சீனர்கள் பலர் சமூக வளைத்தளங்களில் கூறுகின்றனர். ஹுவாவெய் விவகாரத்திற்கும் சீனாவுடனான பேச்சுவார்த்தைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
டிசம்பர் 1ஆம் தேதி கனடாவின் வென்கூவர் விமான நிலையத்தில் மெங் கைதானதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. கனடிய நீதிமன்றம் மெங் மீது மோசடி குற்றச்சாட்டை சுமத்தியதைத் தொடர்ந்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.