இலவச உணவுக்காகத் திரண்ட கூட்டத்தில் மிதிபட்டு மாண்ட மூதாட்டிகள்

கோலாலம்பூரிலுள்ள ‘புட்டு ஐசிசி’ கடைத்தொகுதியில் இலவச உணவுச்சீட்டுகளைப் பெற ஆயிரக்கணக்கானோர் கூடியபோது இரு மூதாட்டிகள் மிதிபட்டு மாண்டனர். ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டிருந்த அந்தக் கூட்டத்தினருக்கிடையே 85 வயது திருவாட்டி ஆ போ, 78 வயது லாவ் யோன் நாங் ஆகியோர் விழுந்து உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சீனப் புத்தாண்டுக்காக இந்தச் சீட்டுகள் கொடுக்கப்பட்டதாக ‘புட்டு ஐசிசி’ கடைத்தொகுதியின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். இந்த நன்கொடை நடவடிக்கை இரண்டாவது ஆண்டாக நடைபெறுவதாகவும் கடந்த முறை இதுபோன்ற அமளி ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார். 

இந்தச் சீட்டுகளைப் பெற நான்கு நான்கு பேராகத்தான் உள்ளே நுழையவேண்டும் என்று அறிவிக்கப்பட்டபோதும் அதனை எவரும் பொருட்படுத்தாமல் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டே சென்றதாகக் கடைத்தொகுதியின் காவல் அதிகாரி ஒருவர் ‘த ஸ்டார்’ செய்தித்தளத்திடம் தெரிவித்தார். சம்பவத்தின்போது கதறல்களைக் கேட்டதாகவும் பின்னர் நான்கு பேர் மயங்கி விழுந்ததைக் கண்டதாகவும் அவர் கூறினார். அவர்களில் இருவரின் மூச்சு நின்றுவிட்டதாகவும் மூதாட்டிகளைக் காப்பாற்ற முயற்சிகள் எடுத்தபோதும் அவை பலனளிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.