தேசிய முன்னணியின் வெற்றி குறித்து வியப்படைய ஒன்றும் இல்லை: மகாதீர்

கேமரன் ஹைலன்ட்ஸ் தொகுதி நெடுங்காலமாக தேசிய முன்னணியின் அரணாக இருந்துவந்ததால் அதன் இடைத்தேர்தல் வெற்றி குறித்து வியப்படையவில்லை என்று மலேசியப் பிரதமர்  மகாதீர் முகம்மது தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை நடந்த அந்தத் தேர்தலில் தேசிய முன்னணியின் வேட்பாளர் ரம்லி முகம்மது நூர், 12,038 வாக்குகளைப் பெற்று பக்கத்தான் ஹரப்பானின் மனோகரனை (8,800 வாக்குகள்) தோற்கடித்தார்.

தேசிய முன்னணியைக் கிராமப்பகுதிகளில் வாழ்பவர்கள் வழக்கமாக ஆதரிப்பதாக பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைவராகவும் உள்ள டாக்டர் மகாதீர் கூறினார். ஆயினும், தேசிய முன்னணி இனத்தை மையமாக வைத்துப் பிரசாரத்தில் ஈடுபட்டது வருத்தமளிப்பதாக அவர் சொன்னார்.