மகாதீர்: இசிஆர்எல் திட்டம் தொடர்ந்தால் மலேசியா ஏழை நாடாகிவிடும்

கிழக்குக் கரை ரயில்பாதை இணைப்புத் (இசிஆர்எல்) திட்டத்தை மலேசியா தொடர்ந்து செயல்படுத்தினால் அது ஏழை நாடாகிவிடும் என்று அந்நாட்டின் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்திருக்கிறார். இத்திட்டம் ரத்து செய்யப்படும் என்று டாக்டர் மகாதீர் இன்னமும் உறுதிப்படுத்தவில்லை. ஆயினும், இந்த ரயில் திட்டத்திற்குச் செய்யப்படும் செலவைவிட அதனை ரத்து செய்வதற்குக் கட்டவேண்டிய இழப்பீட்டுத் தொகை குறைவாக இருப்பதாக அவர் கூறினார்.

“எங்களுக்குக் கடன் சுமை அதிகமாக உள்ளது. அனைத்துத் தரப்பினரின் புரிதலை நாங்கள் நாடுகிறோம். இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தினால் நாம் ஏழைகளாகிவிடுவோம்,” என்று டாக்டர் மகாதீர் இன்று செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

81 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான இந்த ரயில் இணைப்புத் திட்டத்தைக் குறைந்த பணச்செலவில் செயல்படுத்துவதற்காக மலேசிய அரசாங்கம் வேறு குத்தகையாளரை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.