தையல் ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்

பங்ளாதேஷில் அனைத்துலக ஆடை மற்றும் துணி நிறுவனங்களுக்காகக் குறைந்த சம்பளத்தில் தையல் வேலை செய்யும் கிட்டத்தட்ட 5,000 ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து முதலாளிகளால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக, தங்களுக்குக் கிடைத்த சம்பளம் குறித்த அதிருப்தியால் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் தையல் தொழிற்சாலையைவிட்டு வெளியேறி வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் மாண்டதாகவும் 50க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இறுதியாக, சம்பளங்களைச் சில காசுகள் உயர்த்த பங்ளாதேஷ் அரசாங்கம் ஒத்துக்கொண்டதை அடுத்து ஆர்ப்பாட்டங்கள் ஓய்ந்தன. இருந்தபோதும், ஊழியர்களின் சம்பளங்கள் வெகு குறைவாக இருப்பதாகவும் ஊழியர்கள் தொடர்ந்து வறுமையால் வாடுவதாகவும் ‘கிளீன் கிளோர்ஸ் கெம்பெய்ன்’ என்ற ஆர்வலர் குழு தெரிவித்தது.

பங்ளாதேஷின் ஏற்றுமதி வருவாயில் 80 விழுக்காடு வெளிநாடுகளில் விற்கப்படும் ஆடைகளிலிருந்து வருகிறது. 'எச்என்எம்', 'வால்மார்ட்' உள்ளிட்ட அனைத்துலக நிறுவனங்களுக்கு இந்த ஊழியர்கள் பணிபுரிகின்றனர். “தையல் தொழிற்சாலைகளிலிருந்து இதுவரை 4,899 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்,” என்று மூத்த போலிஸ் அதிகாரி ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். மாதத்திற்குச் சுமார் 95 அமெரிக்க டாலர் (128.43 வெள்ளி) மட்டுமே சம்பாதிக்கும் 1,200க்கும் அதிகமான ஊழியர்கள் ஒரு தொழிற்சாலையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.