பாலஸ்தீனப் பிரதமர் பதவி விலகினார்

பாலஸ்தீனப் பிரதமர் ரமி அல் ஹம்தல்லா, தனது பதவி விலகல் கடிதத்தை அதிபர் மகமுத் அப்பாஸிடம் சமர்ப்பித்திருக்கிறார். காசாவின் ஹமாஸ் அமைப்புடனான சமரச முயற்சிகளுக்கு இந்தப் பதவி விலகல் பின்னடைவாக இருப்பதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

ஃபாத்தா கட்சியைச் சேர்ந்த திரு ஹம்தல்லாவின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுள்ளதாகக் கூறிய திரு அப்பாஸ், புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரை அரசாங்கப் பணிகள் தங்குதடையின்றி தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறினார்.

கல்விமானாகப் பணியாற்றியிருந்த திரு ஹம்தல்லா, 2014ஆம் ஆண்டில் அந்நாட்டின் தேசிய ஐக்கிய அரசாங்கத்திற்குத் தலைவராகப் பொறுப்பேற்றார். ஹமாஸ் இயக்கத்துடன் ஃபாத்தா கட்சி மேற்கொண்ட சமரச முயற்சிகளை அவர் வழிநடத்தி வந்தார்.