கிம்-டிரம்ப் சந்திப்புக்கான இடம், நேரம் உறுதி

வடகொரியத் தலைவருடனான தமது சந்திப்புக்கான இடமும் நேரமும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருக்கிறார். ஆனால் சந்திப்பு எங்கு, எப்போது நடைபெறும் என்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை. இந்த விவரங்கள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று திரு டிரம்ப் கூறினார்.

“சந்திப்புக்கான இடத்தையும் தேதியையும் நாங்கள் அறிவிக்கவுள்ளோம். பிப்ரவரியின் இறுதியில் சந்திப்பு நடைபெறும்,” என்று திரு டிரம்ப், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆசியாவிலுள்ள ஓர் இடத்தில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்புக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள குழு ஒன்றை நியமித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ தெரிவித்தார்.

இவ்விரு தலைவர்களும் கடைசியாக சிங்கப்பூரில் கடந்தாண்டு ஜூன் மாதம் சந்தித்தனர். அமெரிக்க-வடகொரியத் தலைவர்களுக்கு இடையே முதன்முதலாக நிகழ்ந்த சந்திப்பாக அது அமைந்தது. அந்தச் சந்திப்பில் திரு கிம், வடகொரியத் தீபகற்பத்தில் அணுவாயுதங்களை முற்றிலும் களைவதாக வார்த்தையளவில் கடப்பாடு தெரிவித்தபோதும் அதனை அவர் இதுவரை செயல்படுத்தவில்லை. வடகொரிய விவகாரத்தில் “பெரும் முன்னேற்றம்” ஏற்பட்டுள்ளதாகக் கூறிய டிரம்ப், இதற்கான ஆதாரத்தையும் வழங்கவில்லை.

Loading...
Load next