வழக்கறிஞர் அம்பிகா: நஜிப்புக்குப் பெருகும் ஆதரவு கவலை அளிக்கிறது

எஸ். அம்பிகா.

தொடர்ந்து அரசியல் கவனத்தை ஈர்ப்பதில் மலேசியாவின் முன்னைய பிரதமர் நஜிப் ரசாக் வல்லவர் என்றாலும், அவருக்கு ஆதரவு பெருகுவது கவலைக்குரியது என்று அந்நாட்டின் பிரபல மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான எஸ். அம்பிகா, ‘த மலே மெய்ல்’ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். மற்ற நாடுகளில் இத்தனை குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் தலைவர்கள் நஜிப்பை போல் இவ்வளவு விரைவில் பிரபலம் அடைந்திருக்க முடியாது என்று மலேசியாவின் முன்னைய வழக்கறிஞர் சங்கத் தலைவராக இருந்த திருவாட்டி அம்பிகா கூறினார்.

ஊழல், அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான 42 குற்றச்சாட்டுகள் நஜிப் மீது சுமத்தப்பட்டுள்ளன. ஆயினும், அண்மையில் பல்வேறு சமூக ஊடகத்தளப் பதிவுகளின் மூலம் அவர் மக்களின் கவனத்தைத் தொடர்ந்து ஈர்த்து வருகிறார். மேலும் அவர், அடித்தளத் தலைவர்களைச் சந்தித்து வருவதுடன் கிராமப் பகுதிகளுக்குப் பலமுறை வருகை அளித்திருக்கிறார். நஜிப்பின் இந்த உத்திகளிலிருந்து தற்போதைய பக்கத்தான் ஹராப்பான் அரசாங்கம் கற்றுக்கொள்ளலாம் என்று திருவாட்டி அம்பிகா சொன்னார்.