குறைந்து வரும் மலாய்க்காரர்கள் ஆதரவு; வழிதேடும் வான் அசிசா

பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைமையிலான அரசாங்கத்தின்மீது மலாய்க்காரர்கள் கொண்டுள்ள கவலையைப் போக்க அதிக நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று மலேசியத் துணைப் பிரதமர் வான் அசிசா தெரிவித்திருக்கிறார். மலாய்க்காரர்களில் கிட்டத்தட்ட 40 விழுக்காட்டினரே தற்போதைய அரசாங்கத்தை ஆதரிப்பதாகக் குறிப்பிடும் கருத்தாய்வு ஒன்றின் தொடர்பில் அவர் தமதுகருத்துகளை வெளியிட்டார். ‘இல்ஹம் சென்டர்’ என்ற ஆய்வமைப்பு இந்தக் கருத்தாய்வை வெளியிட்டது. 

மலாய்ச் சமூகத்தைச் சேர்ந்த 2,614 பேர் பங்கேற்ற இந்தக் கருத்தாய்வில் 59.5 விழுக்காட்டினர், பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று கருத்தாய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மலேசிய அரசாங்கம் முஸ்லிம் அல்லாதோரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக 60 விழுக்காட்டினர் நினைப்பதாகவும் கருத்தாய்வு கூறுகிறது.

கடந்த ஆண்டு மே மாதத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய பக்கத்தான் ஹரப்பான், மலாய்க்காரர்கள் ஆதரவை மெல்ல இழந்துவருவது குறித்து அக்கட்சித் தலைவர்கள் கவலை அடைந்துள்ளனர். கேமரன் மலையில் ஜனவரி 26ஆம் தேதி நடந்த இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் சந்தித்துள்ள தோல்வி, இந்தக் கவலையை அதிகரித்துள்ளது. “மக்களின் கவலைகளையும் கருத்துகளையும் கேட்டு அவற்றில் ஏதேனும் நியாயம் உள்ளதா என்பதை ஆராயவேண்டும்,” என்று திருமதி வான் அசிசா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

“அறுபது ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய அரசாங்கத்தை அமைக்கும்போது செய்யவேண்டிய பல்வேறு மாற்றங்கள் உள்ளன. செய்யவேண்டி மாற்றங்கள் என்னென்ன என்பதை நாம் இப்போதுதான் அடையாம் காண முடிகிறது,” என்று அவர் கூறியதாக ‘மலே மெயில்’ செய்தித்தாள் குறிப்பிட்டது.

பொதுத்தேர்தலுக்குப் பிறகு, பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் நிதியமைச்சர், தலைமைச்சட்ட அதிகாரி உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கு மலாய் இனத்தவர் அல்லாதோரைத் தேர்ந்தெடுத்தது மலாய்ச் சமூகத்தை அதிருப்தி அடையச் செய்திருக்கக்கூடும் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

Loading...
Load next