தமக்கு திருமணமா என்று சிரிக்கும் மலேசிய அமைச்சர்

புத்ராஜெயா: மலேசியாவில் அமைச்சர் ஒருவருக்குத் திரு­மணம் நடைபெறுவது என்பது மிக அபூர்வமாகவே நடைபெறும் ஒரு நிகழ்வாகும். 
அமைச்சர்களாக பொறுப்பு ஏற்பவர்கள் பெரும்பாலும் 40 வயதைக் கடந்தவர்களாகவே இருப்பதே அதற்குக் காரணம்.
ஆனால், மலேசியாவின் 14வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பதவியேற்ற பக்கத்தான் ஹரப்பான் அமைச்சரவையில் ஒருசில அமைச்­சர்கள் திருமணம் ஆகாதவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.
அவர்களில் ஒருவர் அமைச்சர் இயோ பீ யின். எரிசக்தி, அறி­வியல், தொழில்நுட்பம், சுற்றுச்­ சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்­திற்கான அமைச்சரான இவர், இளமையானவர் என்பதோடு இன்னும் திருமணம் ஆகாதவர்.
இளையர் விளையாட்டுத் துறை அமைச்சர் சையது சாதிக், திரு­மணம் ஆகாத மற்றோர் அமைச்­ சராவார்.
குமாரி இயோ பீ யின்னின் திருமணம் எதிர்வரும் மார்ச் 29ஆம் தேதி நடைபெறும் எனவும் அவரைக் கரம்பிடிக்கப் போகிறவர் ‘ஐஓஐ புராப்பர்ட்டிஸ்’ குழுமத்தின் தலைமை நிர்வாகி லீ இயோவ் செங் என்றும் மலேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நாடு முழுவதும் பல தோட்டங்­களையும் சொத்துகளையும் கொண்டிருக்கும் ஐஓஐ குழுமம் பூச்சோங் வட்டாரத்தில் மிகப்பெரிய வீடமைப்பு மேம்பாட்டுத் திட்டங்­களை மேற்கொண்டுள்ள நிறுவன­ மாகும்.
இந்நிலையில் அமைச்சர் இயோ, தமது திருமணம் பற்றி இன்னும் அதிகாரபூர்வமாக அறி­ விக்கவில்லை. 
36 வயதான குமாரி இயோவை கரம்பிடிக்கும் 40 வயதான திரு லீ, நாட்டிலுள்ள பெரும் கோடீஸ்­வரர்களில் ஒருவரான லீ ‌ஷின் செங்கின் மகனாவார்.
ஏற்கெனவே சமூக ஊடகங்­களில் குமாரி இயோ தனது காதலருடன் இணைந்து இருக்கும் படங்கள் பகிரப்பட்டு இருக்கின்­ றன.
ஜோகூர் மாநிலத்தின் மூவாரில் நேற்று தொகுதி உலா சென்ற அமைச்சர் இயோவிடம் திருமணம் குறித்து செய்தியாளர்கள் வின­ வினர்.
திருமணம் குறித்த வதந்தி­களை அவர் மறுக்காவிட்டாலும், “எனக்கு அதைப் பற்றி தெரியாது. தனிப்பட்ட வாழ்க்கையில் வரும் நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவிக்க நான் விரும்ப­வில்லை,” என்று சிரித்தவாறு பதிலளித்தார்.