காற்றுத் தூய்மைக்கேட்டுக்காக  மன்னிப்புக் கோரியது தாய்லாந்து

பேங்காக்: தாய்லாந்து மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் சுகா­தாரத்­திற்கும் பெரும் பாதிப்பைக் காற்றுத் தூய்மைக்கேடு ஏற்படுத்தியுள்ள வேளையில், அந்நாட்டு அரசாங்கம் அதன் மக்களிடம் அதற்காக மன்னிப்பு கோரியுள்ளது.
பேங்காக்கை புகைமூட்டம் சூழ்ந்ததால் அண்மைக்கால­மாக அந்நகரில் காற்றின் தரம் மோசமடைந்து காணப்பட்டது. 
இதையடுத்து, அங்குள்ள 437 பள்ளிகளுக்கு கடந்த புதன்­கிழமை முதல் வெள்ளிக்­கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்­பட்டிருந்தது.
கடந்த பல வாரங்களாகவே பேங்காக்கில் புகைமூட்டம் இருந்து வருகிறது. இதனால் மக்கள் முகக்கவசம் அணிந்த­படியே நடமாட வேண்டியுள்ளது. 
புகைமூட்டத்தைக் கட்டுப்­படுத்தத் தடுமாறி வரும் அர­ சாங்கத்தை அவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் கடு­மையாக விமர்சித்து வருகின்றனர்.
இதற்கிடையே, செயற்கை­யாக மழை பெய்ய வைப்பது உட்பட காற்றுத் தூய்மைக்கேட்டைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரு­ கிறது.
சீனப் புத்தாண்டு நெருங்கும் நிலையில் ஊதுவத்திகளைக் கொளுத்தவேண்டாம் என்றும் அரசாங்கம் மக்களைக் கேட்டுக்­­ கொண்டுள்ளது. 
அத்துடன், தொழிற்சாலை­களில் இருந்து வெளியாகும் புகையின் அளவை அதிகாரிகள் அணுக்க­மாகக் கண்காணித்து வருகின்­றனர்.
மாசின் அளவைக் குறைக்கும் நோக்கில் கட்டடங்­களின் மேல் இருந்து அதிகாரிகள் காற்றில் தண்ணீரைத் தெளித்து வருகின்­ றனர்.
“மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்காக அரசாங்கம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறது. அனைவரது ஆதரவுக்கும் ஒத்து­ழைப்புக்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்,” என்று அந்நாட்டுப் பிரதமர் பிரயுட் சான்=ஓ=சா கூறியுள்ளார்.
டீசல் எரிபொருளில் இயங்கும் வாகனங்களைத் தேவைப்படும்­போது மட்டுமே ஓட்டுமாறு வாகன உரிமையாளர்களை அவர் கேட்டுக்­­ கொண்டார். கார் இயந்திரங்களில் எரி­பொருள் சரிவர எரிபடாததால் வெளியாகும் தூசு துகள்களே புகைமூட்டத்திற்கு முக்கியக் காரணம் என்று கூறிய திரு பிரயுட், இப்போதைக்கு முடிந்த­ வரை கார்கள் ஓட்டுவதை தவிர்க்­குமாறு கேட்டுக்கொண்டார்.