‘நான் சாகவில்லை’ - ஃபேஸ்புக் நேரலையில் டுட்டார்ட்டே

பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டார்ட்டே, தாம் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணி, ஃபேஸ்புக்கின் நேரலை காணொளியின் மூலம் நேற்று உரையாற்றினார்.

“நான் மாண்டுவிட்டேன் என்று நினைத்தவர்கள் அனைவரையும் எனது ஆன்மாவின் நிம்மதிக்காகப் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் அந்தக் காணொளியில் கிண்டலாகக் கூறினார்.  இந்தக் காணொளி, திரு டுட்டார்ட்டேயின் மனைவி திருவாட்டி அவென்செனாவின் ஃபேஸ்புக் கணக்கின் மூலம் எடுக்கப்பட்டது.

திரு டுட்டார்ட்டேக்கு உடல்நலம் சரியில்லாததால் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த அரசாங்க நிகழ்ச்சி ஒன்றுக்கு அவர் செல்லவில்லை என்று அவரது அலுவலகம் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து திரு டுட்டார்ட்டேயைப் பற்றிய மரண வதந்திகள் மீண்டும் புத்துயிர் பெற்று ஊடகங்களில் பரவின. கடந்தாண்டு அக்டோபரில் திரு டுட்டார்ட்டேக்குக் குடலில் சோதனை செய்யப்பட்டது முதல் அவரது உடல்நிலை பற்றிய பல்வேறு யூகங்கள் எழத் தொடங்கின.