சீனப் புத்தாண்டுக்குப் பிறகு ‘பன்றிகள் கைவிடப்படலாம்’

தைப்பே: சீனப் பஞ்சாங்கத்தின்படி நாளை முதல் பன்றி ஆண்டு தொடங்கவுள்ளதால் தைவானில் பலர் பன்றிக்குட்டிகளை வாங்கி பின்னர் அவற்றைக் கைவிடக்கூடும் என்று அந்நாட்டின் விலங்கு நல ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.

பன்றிகள், தங்களைப் பார்த்துக்கொள்பவர்கள் மீது மிகுந்த பாசம் கொண்டிருப்பதாகப் பன்றி பிரியர்களுக்கான சமூகத் தளம் ஒன்றை நடத்தும் குமாரி அனிதா சென் தெரிவித்தார். ஐந்து வயது குழந்தைக்கு நிகரான அறிவாற்றலும் சுறுசுறுப்பும் பன்றிகளுக்கு இருப்பதாகவும் அவற்றைச் சமாளிக்க பலரால் முடிவதில்லை என்றும் அவர் கூறினார். 

பன்றிகள் பண்ணை விலங்குகளாக இருப்பதால், அவற்றை வீட்டில் வைத்து வளர்க்க வேண்டாமென தைவானிலுள்ள பண்ணை உரிமையாளர் யாங் சான் குவே பரிந்துரைக்கிறார். பன்றிகள் குட்டிகளாக இருக்கும்போது பார்ப்போரைக் கவரும் அழகைக் கொண்டிருந்தாலும், அவை 60 கிலோகிராம் எடைக்கு வளரக்கூடும் என்று திரு யாங் எச்சரித்தார்.

மேலும், தைவானில் பன்றிகளுக்கான மருத்துவச் சேவைகள் எளிதில் பெறக்கூடியது அல்ல. 100 விலங்கு மருந்தகங்களில் ஒன்று மட்டும்தான் பன்றிகளுக்கு மருத்துவச் சிகிச்சை செய்ய சம்மதிக்கும். அதோடு, கைவிடப்படும் பன்றிகளைப் பராமரித்து வளர்க்கக்கூடிய விலங்கு நல அமைப்புகளும் அந்நாட்டில் அதிகம் இல்லை. 

எனவே, நிஜ பன்றியை வாங்கி பன்றி ஆண்டை வரவேற்பதை விடுத்து மற்ற விதங்களில் கொண்டாடுமாறு தைவானிய மக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Loading...
Load next