கால்களில் விலங்குடன் நீதிமன்றத்தில் காற்பந்தாளர்

நாட்டைவிட்டுத் தப்பியோடி ஆஸ்திரேலியாவில் அகதியாக ஏற்கப்பட்ட பஹ்ரேனிய ஆடவர் ஹகீம் அல் அரேபி, தாய்லாந்தில் கைதானதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட்டார். காற்பந்தாளரான ஹகீம் தமது மனைவியுடன் விடுமுறைக்காக தாய்லாந்திற்குச் சென்றபோது, அங்கு தாய்லாந்து போலிசார் பஹ்ரேனின் விருப்பத்தின்பேரில் அவரைக் கடந்தாண்டு நவம்பர் மாதம் கைது செய்தனர்.

சிறை சீருடையுடன் கால்களில் விலங்கிடப்பட்ட நிலையில் ஹகீமை போலிசார் நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றதைச் செய்தியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் சுற்றி நின்று பார்த்தனர்.

“பஹ்ரேனுக்கு என்னை அனுப்பிவிடாதீர்கள்,” என்று ஹகீம் நீதிமன்றத்தில் மன்றாடினார். சொந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டால் சித்ரவதைக்கு ஆளாக நேரிடும் என அவர் கூறினார்.

2014ஆம் ஆண்டில் பஹ்ரேனைவிட்டுத் தப்பியோடிய ஹகீமை ஆஸ்திரேலியா அகதியாக ஏற்றது. ‘பெஸ்கோ வேல்’ என்ற ஆஸ்திரேலியக் காற்பந்து குழுவுக்காக அவர் விளையாடினார்.

பஹ்ரேனில் நாசவேலைக்காகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஹகீம், தாம் அந்தக் குற்றத்தைச் செய்யவே இல்லை என்று தொடர்ந்து கூறுகிறார். அவருக்கு பஹ்ரேனிய நீதிமன்றம் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்திருக்கிறது. நீதிமன்ற விசாரணை நிறைவடைய பல மாதங்களாகும் என்று தாய்லாந்தின் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.