ஐக்கிய அரபு சிற்றரசுகளில் போப்பாண்டவர்;  வரலாற்று சிறப்புமிக்க பயணம்

அபுதாபி: ஐக்கிய அரபு சிற்றரசு களுக்கு போப்பாண்டவர் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் அவர் அங்கு சென்றடைந்தார்.
அரேபிய தீபகற்பத்திற்கு இதுவரை எந்த ஒரு போப் பாண்டவரும் போனதில்லை.
எனவே, இதை வரலாற்று சிறப்புமிக்க பயணமாகக் கருதப் படுகிறது.
ஐக்கிய அரபு சிற்றரசுகளில் போப்பாண்டவர் 48 மணி நேரத்துக்கு இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
அங்கு அவர் இஸ்லாமிய சமய போதகர்களைச் சந்தித்துப் பேச இருக்கிறார்.
சமயங்களுக்கு இடையிலான மாநாடு ஒன்றில் போப்பாண்டவர் கலந்துகொள்கிறார். 
எகிப்தின் அல் அசார் பள்ளிவாசலின் இமாம் ஷேக் அகமது அல் தயீப்பை போப்பாண்டவர் சந்தித்துப் பேசுவார் என்று ஐக்கிய அரபு சிற்றரசுகளின் ஊடகம் தெரி வித்தது.
அதுமட்டுமல்லாது, இன்று அவர் ரோம் நகருக்குத் திரும் புவதற்கு முன்பு ஏறத்தாழ 135,000 கத்தோலிக்கர்களுடன் அபுதாபி யில் உள்ள விளையாட்டரங்கத்தில் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடு வார்.
இதுவே ஐக்கிய அரபு சிற்றரசுகளில் நடைபெற இருக்கும் ஆகப் பெரிய வெளிப்புறக் கூட்டுப் பிரார்த்தனை என்று ஐக்கிய அரபு சிற்றரசுகளின் ஊடகம் தெரிவித்தது.
ஐக்கிய அரபு சிற்றரசுகளில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் கத்தோலிக்கர்கள் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் பிலிப்பீன்ஸ் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். 
போப்பாண்டவரை (இடமிருந்து மூன்றாவது) வரவேற்கும் அபுதாபியின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் ஸாயீது அல் நயான். அவர்களுடன் எகிப்தின் அல் அசார் பள்ளிவாசலின் இமாம் ஷேக் அகமது முகம்மது அல் தயீப் (இடது). படம்: ராய்ட்டர்ஸ்