கன்னியாஸ்திரிகளின் பாலியல் துன்புறுத்தலை நிறுத்த போப் பிரான்சிஸ் கடப்பாடு

கன்னியாஸ்திரிகளின் பாலியல் துன்புறுத்தலை நிறுத்த கத்தோலிக்க தேவாலயத்தின் தலைவர் போப் பிரான்சிஸ் கடப்பாடு தெரிவித்திருக்கிறார். அபு தாபியிலிருந்து வட்டிகன் நகருக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்த விமானம் ஒன்றில் இது பற்றிய செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு போப் பிரான்சிஸ் பதிலளிக்கையில் அவ்வாறு கூறினார். பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுக்கு எதிராகக் குரல்கொடுக்கும் ‘மீடூ’ இயக்கத்தில் அண்மையில் கன்னியாஸ்திரிகள் பலர் சேர்ந்துள்ளனர்.

“இது உண்மை... இதனை (பாலியல் தொல்லை) பாதிரியார்களும், ஏன் பேராயர்களும் செய்திருக்கின்றனர். ஒரு பிரச்சனையைப் பற்றி தெரிவதனால் மட்டும் அது நின்றுவிடாது,” என்று அவர் கூறினார்.

“இது குறித்து நீண்ட காலமாக நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒருசிலரை நாங்கள் பணிநீக்கம் செய்திருக்கிறோம், ” என்றும் அவர் சொன்னார்.

பாலியல் வதை, ஊழல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் கன்னியாஸ்திரி அமைப்பு ஒன்றை தேவாலயம் மூடவிருப்பதாக போப் பிரான்சிஸ் கூறினார். அந்த அமைப்பின் பெயரை அவர் குறிப்பிடவில்லை என்றாலும் அது பிரான்சில் இருப்பதாக வட்டிகன் நகர் பேச்சாளர் அலெஸ்ஸான்ட்ரோ கிசொட்டி தெரிவித்தார்.