வேற்றுமைகளுக்கு இடையே ஒற்றுமையைக் கேட்கும் அதிபர் டிரம்ப்

அதிக துடிப்பு, வளப்பம் மற்றும் சக்திவாய்ந்த அமெரிக்காவுக்கான தனது குறிக்கோளை அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப், மக்களுக்கு ஆண்டுதோறும் ஆற்றும் தனது உரையில் கூறினார். பழிதீர்க்கும் அரசியலை நிராகரிக்கவும் அவர் அரசியல் எதிராளிகளிடம் தமது உரையில் கேட்டுக்கொண்டார்.

மருந்து விலைகளைக் குறைப்பது, சுகாதாரத் துறையைச் சீர்திருத்துவது, உள்கட்டமைப்பில் முதலீடு செய்வது உள்ளிட்ட பல இனங்களில் திரு டிரம்ப்பின் குடியரசுக் கட்சியும் ஜனநாயகக் கட்சியும் இணக்கம் காணலாம் என்று அரசியல் கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆயினும், கருக்கலைப்பு, மெக்சிகோவுடனான தெற்கு எல்லைப் பகுதியில் சுவர் எழுப்புவது ஆகிய விவகாரங்களில் அந்த இரண்டு கட்சிகளின் வேறுபாடுகள் மிக ஆழமாக உள்ளன.

சட்டவிரோத குடிநுழைவு அமெரிக்காவின் தேசிய நெருக்கடி என்று கூறிய திரு டிரம்ப், எல்லைச் சுவரைக் கட்டுவதற்காக அவசர கால சட்டத்தைப் பயன்படுத்த கருதியதாகத் தகவல்கள் வெளிவந்தன. இதனைத் தமது உரையில் மீண்டும் டிரம்ப் நினைவுகூர்ந்தார். “அமெரிக்காவின் அரசியல் வர்க்கத்தினருக்கும் உழைக்கும் வர்க்கத்தினருக்கும் உள்ள பிரிவை இந்த விவகாரத்தைப் போல் வேறு எந்த விவகாரமும் எடுத்துக்காட்டுவதில்லை,” என்று அவர் கூறினார். செல்வந்த அரசியல்வாதிகளும் வர்த்தகக் கொடையாளிகளும் தங்களது வீடுகளுக்குச் சுவர்கள், மதில்கள் ஆகியவற்றை அமைத்து, நாட்டுக்கு மட்டும் திறந்த எல்லைகளைக் கேட்டு வருவதாக திரு டிரம்ப் சொன்னார்.

எல்லைச் சுவருக்கான நிதியை ஒதுக்கிடும் வரவு செலவுத் திட்டத்தை ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையைக் கொண்டுள்ள நாடாளுமன்றம் ஒப்புதல் அளிப்பதற்கான இறுதி நாள் இம்மாதம் 15ஆம் தேதி. இந்தத் திட்டம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாவிட்டால் அமெரிக்க அரசாங்கம் மீண்டும் முடக்கத்தை எதிர்நோக்கலாம்.

திரு டிரம்ப்பின் உரையின் சில அம்சங்களை ஜனநாயகக் கட்சியினர் வரவேற்றாலும் குடிநுழைவு, கருக்கலைப்பு ஆகிய விவகாரங்களில் நடுநிலைமை இல்லாததால் இக்கட்சிகளுக்கு இடையே இணக்கம் ஏற்படுவது சிரமம் என்று அரசியல் விமர்சகர் திரு ஏரன் கால், ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழிடம் தெரிவித்தார்.