சிங்கப்பூரரைக் கடத்திய எழுவர் கைது

சிங்கப்பூரின் காய்கறி வியாபாரி ஒருவரைக் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் எழுவரை மலேசிய போலிசார் கைது செய்ததாக ‘மலேசியன் இன்சைட்ஸ்’ என்ற பத்திரிகை தெரிவித்துள்ளது.

மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தின் தெற்குப் பகுதியிலுள்ள கேலாங் பட்டா வட்டாரத்தில் அந்த ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். கடத்தப்பட்ட ஆடவரின் குடும்பத்தினர் ஒரு மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகையை வழங்கினார். அதை அடுத்து அவர்கள் கைதானதாக ஜோகூர் போலிஸ் தலைவர் முகம்மது காலில் முகம்மது காதர் கூறினார்.

50 வயது மதிக்கத்தக்க அந்தச் சிங்கப்பூரர் ஜனவரி 27ஆம் தேதி கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரது பெயர் வெளியிடப்படவில்லை. கைது நடவடிக்கையின்போது போலிசார் பிணைத்தொகையின் ஒரு பகுதியுடன் பல்வேறு ஆயுதங்களையும் பறிமுதல் செய்ததாக ‘மலேசியன் இன்சைட்ஸ்’ கூறியது.