சீன வர்த்தகரின் விசாவை மீட்டுக்கொள்ளும் ஆஸ்திரேலியா

பிரபலமான சீன வர்த்தகரும் அரசியல் கொடையாளியுமான ஹுவாங் சியாங்மோவின் விசாவை ஆஸ்திரேலியா மீட்டுக்கொண்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் சீனாவின் விருப்பங்களை அவர் செயல்படுத்தி வந்ததாக முன்னர் குற்றஞ்சாட்டப்பட்டார்.

ஹுவாங் ஆஸ்திரேலியாவில் இல்லாதபோது அந்நாட்டு அரசாங்கம் அவரது குடியுரிமை விண்ணப்பத்தை நிராகரித்ததுடன் விசாவையும் ரத்து செய்ததாக ‘தி சிட்னி மார்னிங் ஹெரால்ட்’ செய்தித்தாள் தெரிவித்தது. இந்த முடிவுக்கான காரணத்தை அந்தச் செய்தித்தாள் குறிப்பிடாதபோதும், ஹுவாங் “ஆஸ்திரேலியாவில் குடியிருக்கத் தகுதியற்றவர்” என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சு தெரிவித்ததாகக் கூறியது.

யூஹு என்ற சீனச் சொத்து நிறுவனத்தை நிறுவிய ஹுவாங், கடந்த மாதம் தாய்லாந்திற்குச் சென்றிருப்பதாக ஹெரால்ட் செய்தித்தாள் தெரிவித்தது. இப்போது அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்த உறுதியான தகவல் வெளிவரவில்லை.  2017ஆம் ஆண்டில் சீனா தனது உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு வருவதாக ஆஸ்திரேலியா குற்றம் சாட்டியது. சீனா இதனை மறுத்தபோதும் இது தொடர்பான புதிய வர்த்தக விதிமுறைகளை ஆஸ்திரேலியா அறிமுகம் செய்யவுள்ளது.