அமெரிக்க ஹோட்டலில் பதுக்கப்பட்ட 1எம்டிபி பணத்தை மீட்க முயற்சிகள்

அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள பார்க் லேன் ஹோட்டலின் பங்குகளில் குறிப்பிட்ட பகுதி அபு தாபியிலுள்ள நிதியம் ஒன்றுக்கு விற்கப்பட்டுள்ளது.  1எம்டிபி நிறுவனத்திலிருந்து காணாமல் போன பணத்தின் ஒருபகுதியை மீட்பதற்காக அமெரிக்க சட்ட அமைச்சு செய்த இந்த விற்பனை கடந்த நவம்பர் மாதம் நிகழ்ந்தது. அமெரிக்க நீதிமன்றம் விசாரித்த சொத்து கையக வழக்கு ஒன்றில், இந்த ஹோட்டலின் மீதான தனது உரிமைகளை விட்டுவிடுவதாக ‘ஜோ லோ’ என பிரபலமாக அழைக்கப்படும் மலேசிய நிதியாளர் லோ தென் ஜோ தெரிவித்தார். 

1எம்டிபி மூலம் கையாடப்பட்ட பணத்தைக் கொண்டு ஜோ லோ ஹோட்டல் பங்குகளை வாங்கியதாகக் குறிப்பிடும் குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்காவின் சட்ட அமைச்சு அவரது பங்குகளைப் பறிமுதல்  செய்தது. கடந்தாண்டு டிசம்பர் 10ஆம் தேதி ஹோட்டலிலிருந்து கிட்டத்தட்ட 140 மில்லியன் டாலர் பணம் அமெரிக்காவுக்கு மாற்றப்பட்டது.

கள்ளப்பணத்தை நல்ல பணமாக்கிய குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு நிதி மோசடி குற்றச்சாட்டுகளை மலேசிய நீதிமன்றம் ஜோ லோவின் மீது கடந்தாண்டு சுமத்தியது. 1எம்டிபியிலிருந்து பெறப்பட்ட நிதியின் மூலம் பெறப்பட்ட $1.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகளைப் பறிமுதல் செய்ய அமெரிக்கா முற்பட்டுள்ளது. இந்தப் பணத்தின் மூலம் ஹோட்டல் பங்குகள் மட்டுமன்றி, ‘இகுவெனிமிட்டி’ என்ற சொகுசு கப்பலும் பப்லோ பிக்காசோவின் ஓவியங்களும் வாங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.