பிரதமர் வேட்பாளராக தாய்லாந்து மன்னரின் மூத்த சகோதரி நியமனம்

தாய்லாந்து மன்னரின் மூத்த சகோதரி உபோல்ரத்தனா ராஜகன்யா அந்நாட்டின் பிரதமர் வேட்பாளராக முன்மொழியப்பட்டிருக்கிறார். மார்ச் 24ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் பங்கேற்கும் வேட்பாளர்களுக்கான பதிவு நடைபெற்றுவரும் வேளையில் இந்தத் தகவல் வெளிவந்துள்ளது.

‘தாய் ரக்ஷ சார்ட்’ கட்சி, 67 வயது இளவரசி உபோல்ரத்தனாவைத் தனது பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்திருக்கிறது. தாய்லாந்தின் முன்னையப் பிரதமர் தக்சின் ‌ஷினாவாட்ராவுடன் இந்தக் கட்சி தொடர்பு வைத்திருக்கிறது. காலஞ்சென்ற தாய்லாந்து மன்னர் பூமிபோன் அடுல்யதேயின் ஆக மூத்த பிள்ளையான உபோல்ரத்தனா, மஸச்சியூசட்ஸ் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் தம்முடன் பயின்ற மாணவர் ஒருவரைத் திருமணம் செய்தார். அந்தத் திருமணத்தால் உபோல்ரத்தனா இளவரசி பட்டத்தைத் துறந்தார். அந்தத் தம்பதியர் 1998ஆம் ஆண்டில் விவாகரத்து செய்த பின்னர் உபோல்ரத்தனா தாய்லாந்திற்குத் திரும்பினார்.