நஜிப் மீது மேலும் மூன்று குற்றச்சாட்டுகள்

மலேசியாவின் முன்னைய பிரதமர் நஜிப் ரசாக்கின்மீது மேலும் மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

திரு நஜிப், தன் மீதான குற்றச்சாட்டுகளை வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 8) அமர்வு நீதிமன்றத்தில் மறுத்துள்ளார். அவர் தனது ‘எம்பிரைவட்’ வங்கிக்கணக்குகள் மூன்றைப் பயன்படுத்தி 47 மில்லியன் ரிங்கிட் பணத்தைக் கள்ளத்தனமாகப் பெற்று அதனை நல்ல பணமாக மாற்றியதாகக் குற்றம் சாட்டப்படுகிறார். இந்தக் குற்றங்களைத் திரு நஜிப் 2014ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் ஐந்து மில்லியன் ரிங்கிட் வரையிலான அபராதம், ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். 

திரு நஜிப் பிப்ரவரி 12ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்றத்தில்  விசாரிக்கப்படுவார்.

பொதுத் தேர்தலில் திரு நஜிப் படுதோல்வி அடைந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு இந்த நீதிமன்ற விசாரணை தொடங்கவிருக்கிறது. ஆயினும், தன் மீது எந்தத் தவறும் இல்லை என்று கூறும் திரு நஜிப், புதிய அரசாங்கத்தின் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு ஆளாவதாகச் சொல்கிறார்.

1எம்டிபி மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடைய பல்வேறு நிறுவனங்களில் ஏற்பட்ட இழப்புகளுக்காக திரு நஜிப் 39 குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.

Loading...
Load next